தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் எல்லையில் 1,610 கி.மீ. வேலி அமைக்க இந்தியா திட்டம்

1 mins read
7cff1172-c065-4623-91da-2bba224e30da
மியன்மார் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் மிசோரம் மாநில, சம்பாய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதைகள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியா - மியன்மார் எல்லையில் 1,610 கிலோமீட்டர் (1,000 மைல்) நீளத்திற்கு வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்தலையும் மற்றச் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு 3.7 பில்லியன் வெள்ளி (கிட்டத்தட்ட ரூ.23,000 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - மியன்மார் எல்லை முழுமைக்கும் வேலி அமைக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆயிரக்கணக்கான மியன்மார்வாசிகளும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் எல்லையோர இந்திய மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர்.

பல்லாண்டு காலமாகவே இரு நாடுகளுக்கு இடையே விசா இல்லாமல் பயணம் செய்யும் கொள்கை நடப்பிலிருந்து வருகிறது. இதனையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதிகளிலும் இனம் சார்ந்த, குடும்பம் சார்ந்த உறவுகள் இருந்து வருகின்றன.

இதனால், மியன்மாரில் நிலவும் சமூகப் பதற்றநிலை இந்தியாவிற்கும் பரவிவிடும் என்று இந்தியா கவலைப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.

மியன்மாரை ஒட்டியுள்ள இந்திய வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள இன மோதலுக்கு இருநாட்டினரும் எளிதாக எல்லை தாண்டிச் சென்றுவர முடிவதே காரணம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

எல்லை முழுமையும் வேலி அமைப்பதுடன், அதற்கு இணையாகச் சாலைகளை அமைக்கவும் எல்லையில் உள்ள ராணுவத் தளங்களை இணைக்கும் வகையில் இணைப்புப் பாதைகளை அமைக்கவும் இந்திய உயரதிகாரிகள் அடங்கிய குழு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்