புதுடெல்லி: இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார்.
இரு தலைவர்களின் சந்திப்பின்போது சிங்கப்பூர்-இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
சிங்கப்பூர் பிரதமர் உடனான சந்திப்பு குறித்து திரு கோயல் சமூக ஊடகத்திலும் பதிவிட்டார்.
“சிங்கப்பூர் பிரதமர் வோங்குடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மறுஉறுதி செய்துகொண்டோம். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அமைச்சர் கோயல் பதிவிட்டார்.
சிங்கப்பூருக்கான தனது அதிகாரத்துவப் பயணத்தின்போது திரு கோயல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ஜினீயரிங் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சின் யா செங்கையும் சந்தித்தார்.
இருநாடுகளுக்கும் இடையில் விமானங்களின் பராமரிப்பு, சரிபார்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் விமானத்துறையில் புத்தாக்கம், திறன் வளர்ச்சி, முதலீடு குறித்தும் தலைவர்கள் பேசினர்.
இந்தியா தனது விமானத்துறை கட்டமைப்பை வலுப்படுத்தவும் உலக நாடுகள் பலவற்றுக்கும் விமானச் சேவைகளை அளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே திரு கோயல் கேப்பிட்டல்லாண்ட் இன்வஸ்மெண்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களிடம் இந்தியாவின் நகரப்புறக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து திரு கோயல் உரையாடினார். மேலும் தளவாடம், சேமிப்புக் கிடங்கு, தரவு நிலையங்கள் ஆகிய துறைகளின் விரிவாக்கம் குறித்தும் அவர் பேசினார்.
நீண்ட காலப் பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் சிங்கப்பூரும் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்கு விமானத்துறை, நகரக் கட்டமைப்பு, புத்தாக்கம், திறன் வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் சிங்கப்பூர் உதவிவருகிறது.