இந்தியா: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது

2 mins read
e059885d-5f31-4fb2-b471-dc59eff486bc
ஒட்டுமொத்த அளவில், பாலர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை இந்தியாவில் கடந்த 2023-24ஆம் ஆண்டில் 24.80 கோடி மாணவர்கள் சேர்ந்தனர். - மாதிரிப்படம்

புதுடெல்லி: கடந்த 2022-23 கல்வியாண்டைக் காட்டிலும் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவில் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை குறைந்தது.

விழுக்காட்டு அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டைவிட 1.5 விழுக்காடும், 2021-22ஆம் ஆண்டைவிட 6.5 விழுக்காடும் குறைவாக மாணவர்கள் சேர்ந்தனர்.

அதாவது, 2022-23ஆம் ஆண்டைக் காட்டிலும் 37.45 லட்சமும் 2021-22ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.71 கோடியும் மாணவர் சேர்க்கை குறைந்தது.

இந்தியக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை மூலமாக இவை தெரியவந்துள்ளன என்று ‘ஏஷியாநெட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த அளவில், பாலர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை இந்தியாவில் கடந்த 2023-24ஆம் ஆண்டில் 24.80 கோடி மாணவர்களும், 2022-23ஆம் ஆண்டில் 25.17 கோடி மாணவர்களும், 2021-22ஆம் ஆண்டில் 26.52 கோடி மாணவர்களும் பள்ளிகளில் சேர்ந்தனர்.

UDISE+ எனப்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையானது, பாலர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சற்றே கூடியுள்ளதாகவும், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி அளவில் அது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2023-23 கல்வியாண்டில் மாணவிகளின் எண்ணிக்கை 29 லட்சம் குறைந்து 11.32 கோடியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 37 லட்சம் குறைந்து 12.17 கோடியாகவும் இருந்தது.

அதே நேரத்தில், 2022-23 கல்வியாண்டில் 14.66 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2023-24 கல்வியாண்டில் 5,782 கூடி, 14.71 லட்சம் ஆனது.

ஆயினும், இது அதற்கு முந்திய ஆண்டுகளைவிடக் குறைவுதான். 2021-22 கல்வியாண்டில் 14.89 லட்சம் பள்ளிகளும் 2020-21 கல்வியாண்டில் 15.09 லட்சம் பள்ளிகளும் இருந்தன.

தனியார் பள்ளிகள் பல மூடப்பட்டதும் மாநில அரசுகளால் நடத்தப்படும் பள்ளிகள் பல ஒருங்கிணைக்கப்பட்டதுமே பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்