ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இந்தியக் கடற்படை நடுக்கடலில் ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பாகிஸ்தான் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகள் அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய அரசு சூளுரைத்தது.
பாகிஸ்தானுக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இல்லை என அந்நாட்டு அரசு மறுத்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சார்க் உறுப்பு நாடு என்ற வகையில், பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா முழுமையாக ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பந்திபோரா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், லஷ்கர்-இ-தொய்பா தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது இருப்பிடம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் பந்திபோராவில் உள்ள அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் மூன்று பேர் காயமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினராலும், ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளாலும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
தோக்கர் மற்றும் ஆசிஃப் ஷேக்கின் வீடுகள் குண்டுவெடிப்பில் அழிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்திய கடற்படை அரபிக்கடலில் ‘ஐஎன்எஸ் சூரத்’ என்ற ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இது தரையில் இருந்து பாய்ந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.
இஸ்ரேலுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, ஏறக்குறைய 70 கிலோ மீட்டர் இடைமறிப்பு வரம்பைக் கொண்ட ஏவுகணையை இந்தியா பரிசோதித்திருப்பது பாகிஸ்தான் தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பயங்கரவாதம், பயங்கரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 24) இந்தியாவில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியின் (LoC) பல இடங்களில் வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அது, அப்பகுதியில் நடப்பில் இருந்துவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் முயற்சியாகக் கருதப்படுகிறது.