நவீன ‘அக்னி’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது இந்தியா

பல இலக்குகளைத் தாக்கும் வல்லமை பெற்றது ‘அக்னி’

நவீன ‘அக்னி’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது இந்தியா

1 mins read
c2bcbf54-cdc1-4749-a394-13f1f4373a85
ஒடிசாவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து நவீன ஏவுகணை பாய்ச்சப்பட்டது. - படம்: என்டிடிவி, டிஆர்டிஓ

இந்தியா, பல இலக்குகளைத் தாக்கக்கூடிய நவீன ‘அக்னி’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்திருக்கிறது.

தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) அதிகாரி ஒருவர் அதனைச் சனிக்கிழமை (மே 9) தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் வட்டாரத்திற்குமேல் ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அதிகாரி கூறினார்.

தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம், தொழில்துறை ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்ததைத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

“அதிகரித்துவரும் மிரட்டல்களுக்கு இடையே நாட்டின் தற்காப்பு ஆயத்தநிலைக்கு அது மேலும் வலுச் சேர்க்கும்,” என்றார் அவர்.

ஒடிசாவின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து நவீன ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அதிகாரத்துவ அறிக்கை தெரிவித்தது.

இந்தியப் பெருங்கடல் வட்டாரத்திற்குமேல் பல இலக்குகள் சோதனையின்போது தாக்கப்பட்டன என்று அது கூறியது.

மண்ணிலும் கடற்பகுதியிலும் நிறுவப்பட்ட பல நிலையங்களிலிருந்து ஏவுகணை சென்ற பாதை தொடர்ந்து கவனிக்கப்பட்டது. அதற்குரிய கட்டமைப்புகள், ஏவுகணை புறப்பட்டதிலிருந்து இலக்குகளைத் தாக்கும்வரை அதனைப் பின்தொடர்ந்தன. ஏவுகணைச் சோதனைக்கான அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.

“வெற்றிகரமான இந்தச் சோதனை, ஒரே ஓர் ஏவுகணைக் கட்டமைப்பைப் பயன்படுத்திப் பல இலக்குகளை இந்தியாவால் தாக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறது. நாட்டின் பல்வேறு தொழில்துறையினரின் உதவியோடு தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வுக்கூடங்கள் ஏவுகணையை உருவாக்கியுள்ளன,” என்று அது சுட்டியது.

‘அக்னி’, எதிரி நாடுகளின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளுக்கு மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்