தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபருக்குக் காலக்கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி

2 mins read
e765a6e7-f69a-4669-b46d-b310db511b17
மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் தொடர்பில் இந்திய ஆளுநர் குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய வரலாற்றில் இதற்குமுன் இல்லாத வகையில், நாட்டின் அதிபருக்கே உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

மாநில ஆளுநர்கள் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்பதே அது.

அந்தக் காலகட்டத்திற்கும் அப்பால் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், உரிய காரணங்களைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம் பத்து மசோதாக்களை மறுபரிசீலனை செய்து அனுப்பிய பின்னரும், அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டார். அவற்றை ‘அதிபரின் பரிசீலனைக்கு’ என்று 2023 நவம்பரில் அவர் ஒதுக்கிவைத்தார்.

அதனை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அவ்வழக்கில், ஆளுநரின் செயல் தவறானது, சட்டத்திற்கு எதிரானது என்று இம்மாதம் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருத வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பத்து மசோதாக்களும் சட்டமானதாக அறிவித்து, தமிழக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதில் அதிபருக்கான காலவரம்பையும் முதன்முறையாக உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

“உள்துறை அமைச்சு பரிந்துரைத்த காலக்கெடுவை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். அதிபர் அத்தகைய குறிப்பைப் பெற்ற நாளிலிருந்து மூன்று மாதக் காலத்திற்குள் முடிவெடுக்கலாம்.

“அதற்குமேல் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பொருத்தமான காரணங்களைப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும். மாநிலங்கள் ஒத்துழைத்து, எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில்களை வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும், மேலும், மத்திய அரசு அளித்த பரிந்துரைகளை விரைவாகக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்