மும்பை: புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்க்கும் நோக்கத்தில் இந்தியாவின் சந்தைகள் ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய வங்கியும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான செயல்முறைகளை எளிதாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றங்களில் குறைவான, தரப்படுத்தப்பட்ட ஆவணங்கள், மற்ற நாடுகளில் ஏற்கெனவே ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீடுகளைச் செய்திருப்பவர்களுக்கு குறைந்த ஒழுங்குமுறை ஆய்வுகள், ஆகியவை அடங்கும்.
இதனால் இந்தியாவில் பதிவு செய்வதற்கு ஆகும் நேரத்தை கிட்டத்தட்ட ஆறு மாதங்களிலிருந்து 30-60 நாட்களாகக் குறைக்கும் என்று பெயர் குறிப்பிடாத தகவல்களின் அடிப்படையில் அச்செய்தி தெரிவித்தது.
சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்திய பத்திரங்கள், பரிவர்த்தனை வாரியமும் (sebi), மத்திய வங்கியும் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவிடமிருந்து இந்தியா கடுமையான வர்த்தக வரிகளை எதிர்நோக்கும் வேளையில் இந்த உத்தேச மாற்றங்கள் வந்துள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2025ல் இதுவரை இந்திய பங்குகள், பத்திரங்களில் யுஎஸ் $10 பில்லியன் டாலர் நிகர விற்பனையை செய்துள்ளனர், முடக்கப்பட்ட பெருநிறுவன வருவாய், அமெரிக்க வரி உயர்வு கவலைகள் காரணமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
இந்திய ஒழுங்குமுறை அதிகாரிகள் கடந்த ஐந்து மாதங்களில் ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா முழுவதும் 200க்கும் மேற்பட்ட உலகளாவிய சொத்து மேலாளர்களை சந்தித்து, இந்தியச் சந்தைகளை மேலும் அணுகக்கூடிய வழிகள் குறித்து கருத்துகளைக் கேட்டுள்ளனர்.
தனித்தனியாக ஆறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பேராளர் குழு இந்த மாத தொடக்கத்தில் மத்திய வங்கி, செபி, பங்குச் சந்தை, நிதி அமைச்சு அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் வங்கிக் கணக்குகளைத் திறப்பதும் எளிதாக்கப்படும் என்றும் அறியப்படுகிறது.