பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 50%-70% வேலைகளை கன்னட மக்களுக்கு வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது திறனாளர்களை ஈர்க்கும் அனைத்துலக நிறுவனங்களுக்கு கடினமாக இருக்கும்.
தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 விழுக்காடும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 விழுக்காடும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்தும் சட்டத்துக்கு மாநில அமைச்சரவை புதன்கிழமை (ஜூலை 17) ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் கர்நாடகத்தில் வசித்து கன்னட மொழியை நன்கு எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீட்டில் பணி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் நடப்புக்கு வந்தபிறகு, விதிமுறைகளை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவருக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு மேலும் அதிகமான அபராதம் விதிக்கப்படும் என்று மசோதா கூறுகிறது.
பெங்களூரில் கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நிறுவனங்களும் வால்மார்ட் முதல் ஆல்பபெட்டின் கூகள் வரையிலான அனைத்துலக நிறுவனங்களும் அங்கு செயல்படுகின்றன. இந்தியாவின் இரு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ இரண்டும் அங்கு செயல்படுகின்றன.
“ஒருவேளை இங்கே திறமையானவர்கள் இல்லாத நிலையில், வெளிநாட்டினருக்கு வேலை வழங்குவதாக இருந்தால் அவர்கள் கர்நாடகாவில் தங்கி வேலை பார்க்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“கர்நாடகாவில் திறமையானவர்கள் இருந்தால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்று கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.
தொழில்கள், தொழிற்சாலைகள், பிற நிறுவனங்களில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா 2024, கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்களை இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளதால் இச்சட்டத்தை நடப்புக்குக் கொண்டுவருவது சிரமம் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.