புதுடெல்லி: பிரபல திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சத்யஜித் ரேயின் மூதாதையர் வீடு இடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்ததோடு, கட்டடத்தின் பழுதுபார்ப்பு, மறுசீரமைப்பிற்கு உதவ முன்வந்துள்ளது.
புகழ்பெற்ற கவிஞர் சுகுமார் ரே, திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே ஆகியோரின் தாத்தாவான 19ஆம் நூற்றாண்டின் பிரபல இலக்கியவாதி, ஓவியர், பதிப்பாளரான உபேந்திரகிஷோர் ரே சௌத்ரியால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வீடு அது.
டாக்காவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் வடக்கே ஹரிகிஷோர் ரே சவுத்ரி சாலையில் அமைந்துள்ள அந்த வீடு, 1947 பிரிவினைக்குப் பிறகு, அரசாங்க உரிமையின்கீழ் வந்தது. 1989ல் மைமென்சிங் ஷிஷு அகாடமியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கைவிடப்பட்டு, சீரழிந்த நிலையில் உள்ளதால், அதை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
“பங்ளாதேஷின் கலாசார மறுமலர்ச்சியைக் குறிக்கும் கட்டடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, அதை இடிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது இலக்கிய அருங்காட்சியகமாகவும் இந்தியா - பங்ளாதேஷ் இடையே பகிரப்பட்ட பண்பாட்டு மரபுடைமைச் சின்னமாகவும் அதனைப் பராமரிக்க இந்தியா உதவும்,” என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.

