தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2,000 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணையை ரயிலிலிருந்து பாய்ச்சியது இந்தியா

2 mins read
90dfbb87-1d40-4dfc-9fe7-419dfb82c2b0
2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி - பிரைம் ஏவுகணையை முதல்முறையாகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட ரயில் தளத்திலிருந்து புதன்கிழமை இந்தியா சோதனை செய்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கிட்டத்தட்ட 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய அக்னி - பிரைம் ஏவுகணையை ரயிலிலிருந்து இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது.

இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு அச்சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக ராணுவத்தினரையும் பாதுகாப்புத் துறை ஆய்வு, மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அறிவியலாளர்களையும் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அக்னி - பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவுவரை இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி - பிரைம் ஏவுகணையை முதல்முறையாகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட ரயில் தளத்திலிருந்து புதன்கிழமை ஏவி டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.

அக்காணொளியை எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பகிர்ந்த ராஜ்நாத் சிங், இந்த வெற்றிகரமான சோதனை, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

அக்னி - பிரைம் பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. குறுகிய நேரத்தில் எதிர்வினையாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில் தளத்தின் மூலம் எவ்வித தடையுமின்றி எந்தப் பகுதிக்கும் கொண்டு செல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.

‘டிஆர்டிஓ’ வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவுகணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த தலைமுறை ஏவுகணைகளை அவ்வமைப்பு வடிவமைத்து வருகின்றது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்