சீனாவில் அதிகம் பரவிவரும் கொவிட்-19 கிருமியின் பிஎஃப்.7 (BF.7) வகை இந்தியாவில் நான்கு பேருக்குத் தொற்றி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத்திலும் ஒடிசாவிலும் அந்தத் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
அவர்களுக்கு அக்டோபர் நவம்பர் மாதங்களில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் வீட்டில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து விட்டனர் என்று குஜராத் சுகாதாரத் துறையை மேற்கோள்காட்டி என்டிடிவி கூறியது.
மேலும், இந்தியாவுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் அவ்வப்போது பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கை இன்று தொடங்கியது.
ஆனால் விமான நிலையங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அதிகாரிகள் கூறினர்.
அத்துடன் கொவிட்-19 தொற்றியவர்களின் மாதிரிகளை மரபணுச் சோதனைக்காக இந்திய சுகாதார அமைச்சின்கீழ் இயங்கும் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசாங்கம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பயப்படத் தேவை இல்லை என்றபோதும், கூட்டம் மிகுந்த இடங்களில் முகக்கவசங்களை அணியும்படி அது பொதுமக்களிடம் ஆலோசனை கூறியது.
சீனாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா நிபுணர்களையும் அதிகாரிகளையும் இன்று சந்தித்தார்.
அதன் பின்னர் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

