தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை

2 mins read
a8a445d7-1661-4e01-9838-fcc071902b40
பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய உச்சநீதிமன்றம் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் இருப்பார் என்று நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) தெரிவித்தது. ஜூன் 2ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி மாநிலத்தின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்டு இடைக்கால பிணை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன் தெரிவித்தது. இடைக்கால பிணை வழங்கக்கூடாது என அமலாக்கத் துறை வியாழக்கிழமை (மே 9) மனுதாக்கல் செய்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம், ஆனால் டெல்லி முதல்வராக அலுவலகப் பணிகளில் ஈடுபடக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. மூன்று கட்டங்கள் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை கிடைத்துள்ளது.

இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக அவர் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்