லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் நகரில் பேசவும் கேட்கவும் இயலாத மனநலம் குன்றிய ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர், பெண்ணைத் துரத்திச்சென்று சீரழித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கண்காணிப்புப் படக்கருவியில் சம்பவம் பதிவாகியிருந்தது. அதன் துணையோடு சந்தேக நபர்கள் இருவரையும் காவல்துறையினர் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) கைதுசெய்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்போது சந்தேக நபர்கள் ஹர்ஷிட் பாண்டேயும் அங்குர் வர்மாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
16 விநாடிகள் நீடிக்கும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வெறுங்காலுடன் ஒரு பெண் ஓடுவதையும் வெளிச்சம் குறைவாக இருந்த யாருமற்ற சாலைக்குள் அவரைத் துரத்திக்கொண்டு ஆடவர்கள் இருவர் மோட்டார்சைக்கிள்களில் செல்வதையும் அதில் பார்க்கமுடிகிறது.
பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பெண்ணுக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புலனாய்வு விசாரணைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.