இந்தியா-ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஒப்பந்தங்கள் கையெழுத்து

2 mins read
0fb252f2-1e44-458a-a582-4356a13b61a2
அபுதாபி விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. - படம்: எக்ஸ் தளம்/முகம்மது பின் சையத்

அபுதாபி: மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எரிசக்தி, தற்காப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இரு நாடுகளும் வெள்ளிக்கிழமையன்று (மே 16) பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியாவின் போர்க்காலத் தயார்நிலை எரிபொருள் கையிருப்பில் 30 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சேமிக்க ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், இந்திய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏறத்தாழ 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விநியோகம் மற்றும் குஜராத்தின் வடினாரில் கப்பல் பட்டறை அமைக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு சிற்றரசுகளின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுடன் தோளோடு தோள் நின்று ஒத்துழைக்கும் என உறுதியளித்தார்.

வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்டகாலப் பொருளியல், எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள பங்காளித்துவம் மேலும் விரிவடையும் என்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் நம்பிக்கை தெரிவித்தார். ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினரைத் தமது குடும்ப உறுப்பினர்களைப் போல கவனித்துக்கொள்வதற்காக அதிபருக்குப் பிரதமர் மோடி தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
நரேந்திர மோடிஐக்கிய அரபு சிற்றரசுகள்ஒப்பந்தம்முதலீடு