புதுடெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக ‘தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை-உத்தி’யை (பிரஹாா் என்ற பெயரில்) மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதில், இணைய ஊடுருவல்காரர்கள் இந்தியாவைத் தொடர்ந்து குறிவைத்து வருவதாகத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு, கடந்த காலத்தில் பயங்கரவாதச் செயல்களால் இந்தியா பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகளும் அவற்றின் முன்னணி அமைப்புகளும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து திட்டமிட்டு, ஒருங்கிணைத்து அரங்கேற்றி வருவதாகவும் கூறியுள்ளது.
பெருங்கேடு விளைவிக்கக்கூடிய வேதியல், உயிரியல் கதிரியக்க, அணு, வெடிப்பொருள்கள், மின்னிலக்கப் பொருள்களை அணுகவும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தவும் பயங்கரவாதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், இத்தகைய செயல்பாடுகளைத் தடுப்பதும் முறியடிப்பதும் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முகவைகளுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சு கூறியது.
மேலும், சில தரப்பினரால் ஆபத்தான நோக்கங்களுக்காக ‘டிரோன்’கள் மற்றும் ‘ரோபாட்டிக்ஸ்’ கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் கவலை ஏற்படுத்துவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே அல்-கய்தா, இஸ்லாமிய அரசு ஈராக்-சிரியா (ஐஎஸ்ஐஎஸ்) போன்ற உலகளாவிய பயங்கரவாதக் குழுக்களின் இலக்காக இந்தியா உள்ளது என்றும் இந்திய உள்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
எளிதில் அடையாளம் காண இயலாத வகையில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் (ஸ்லீப்பர் செல்கள்) இந்தியாவில் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்துவருவதாக பயங்கரவாத எதிர்ப்புக்கொள்கை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது உள்துறை அமைச்சு.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியா மேற்கொண்டு வரும் தொடர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சில உளவுத் தகவல்கள் பிற தரப்புகளுடன் பகிரப்படுகின்றன. வெளிநாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம், நாடு கடத்தல் ஒப்பந்தம், கூட்டுப் பணிக்குழு மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை இந்தியா செய்துகொண்டுள்ளது.
“பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் சட்ட ரீதியான மற்ற ஒத்துழைப்புக்காக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைச் செயல்படுத்த நாடு கடந்த பயங்கரவாதத்தைச் செயல்படுத்துபவர்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பான கவலையை உள்துறை அமைச்சு கொள்கை ஆவணத்தில் வெளிப்படுத்தி உள்ளது.
தளவாடங்கள் மற்றும் ஆட்சேர்ப்புக்காக பயங்கரவாதக் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலைப்பின்னல்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதாகவும் அந்த ஆவணம் விவரிக்கிறது.

