புதுடெல்லி: அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு முறியடிக்கப்பட்டது.
அதையடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலினாய்ஸ் மாநிலத்தின் அரோரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலை இலக்காகக் கொண்டு, 19 வயதான அலெக்சாண்ட்ரோஸ் பாபோராகிஸ் என்ற இளைஞர் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
சம்பவத்தன்று அவர் நவீன ரகத் துப்பாக்கியுடன் அப்பகுதிக்குச் சென்ற போதிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துப்பாக்கி இயங்காமல் போனதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்தே காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து, பயங்கரவாத அச்சுறுத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்காவில் இந்திய சமூகத்தினருக்கு எதிராக அதிகரித்து வரும் இனவெறி உணர்வுகளும் வஞ்சமும் மிகுந்த கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இது போன்ற சம்பவங்கள் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர்,
அமெரிக்க வாழ் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு உரிய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அமெரிக்க எம்பிக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள புலம்பெயர் இந்திய அமைப்புகள் பலவும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.
