உத்திபூர்வ பங்களிப்பை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா இணக்கம்

உத்திபூர்வ பங்களிப்பை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா இணக்கம்

கோப்புப் படம்: ஏஎன்ஐ/இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம்

01 Oct 2026 - 4:03 pm

2 mins read

புதுடெல்லி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்திய-அமெரிக்க உத்திபூர்வ பங்களிப்பை மேலும் வலுப்படுத்தப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் இணங்கியுள்ளனர்.

அமெரிக்கா அண்மையில் அறிவித்த ‘ரஷ்யா, ஈரானுக்குத் தடை விதிக்கும் லின்ட்ஸே ஓ. கிரஹாம் சட்டம் 2026’ (SRIA) நடப்புக்கு வந்த பிறகு, தலைவர்கள் இருவருக்குமிடையே இடையே நடைபெறும் முதல் தொலைபேசி உரையாடல் இது. ரஷ்யா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள்மீது 100 விழுக்காடு வரை வரிகளை விதிக்க இச்சட்டம் அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இதன் தொடர்பில், இந்தியாவின் பொருளியல் நலன்களையும் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்தியா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

செப்டம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்புடன் இருதரப்புப் பேச்சு நடத்தியதை அடுத்து, இந்தியப் பிரதமர் தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபருடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, வர்த்தகம், தற்காப்பு, எரிசக்தி, முக்கியத் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மறுஆய்வு செய்ததாகத் தெரிகிறது. வட்டார, அனைத்துலக நிலவரங்கள் குறித்தும் அவர்கள் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பதிவில், அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது என்றும், இருதரப்பு உறவை மேலும் முன்னெடுத்துச் செல்ல, தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படத் தாங்கள் இருவரும் இணங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய அமைதி, பாதுகாப்பை மேம்படுத்த இப்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் தாங்கள் கலந்துரையாடியதாகத் திரு மோடி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஅமெரிக்காபிரதமர்அதிபர்நரேந்திர மோடிடோனல்ட் டிரம்ப்