புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கான நோக்கங்களும் ஒப்பந்தம் நடத்தப்படும் முறையும் குறித்து அவ்விரு நாடுகள் இணக்கம் கண்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) தெரிவித்தார்.
அனைத்துலக வர்த்தகப் பங்காளிகளுக்குமான கூடுதலான வரிவிதிப்புகள் அடுத்த 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார். இருந்தபோதும், அவர் ஏற்கெனவே விதித்துள்ள 10 விழுக்காடு அடிப்படை வரிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
அத்துடன் சீனா மீதும் அவர் புதிய வரிவிதிப்புகளை விதித்திருக்கிறார். இவற்றால் இந்திய ஏற்றுமதியாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
வர்த்தக உடன்பாடு ஒன்றை இந்த ஆண்டின் பிற்பகுதிக்குள் நிறைவுசெய்ய இந்தியாவும் அமெரிக்காவும் பிப்ரவரியின்போது ஒப்புக்கொண்டனர்.
2030க்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (660 பில்லியன் வெள்ளி) உயர்த்த அவ்விரு நாடுகளும் பிப்ரவரியின்போது இணங்கின.
“மற்ற நாடுகளுடன் ஒப்புநோக்க அமெரிக்காவுடனான நம் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 90 நாள்களில் பல்வேறு சாத்தியங்கள் உள்ளன,” என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க துணையதிபர் ஜேடி வேன்ஸ், விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விவகாரம் தொடர்பாக வர்த்தகர்களுக்கும் பங்காளிகளுக்கும் உள்ள கேள்விகளுக்குப் பதிலளித்து உதவுவதற்கான புதிய சேவையையும் இந்தியா தொடங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்றுமதி, இறக்குமதி சவால்களை ஆராய்வதுடன் தளவாடத் தொடரிலும் நிதி விவகாரங்களையும் இந்தச் சேவை கையாளும்.
சீனா மீதான கடும் வரி வதிப்புக்கு அடுத்து சில நிறுவனங்கள், இந்தியாவைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு ஏற்றுமதிகளைத் திசைத்திருப்பக்கூடும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருந்தபோதும் இந்தியா, நம்பிக்கைக்குரிய வர்த்தகப் பங்காளியாகத் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகத் திண்ணமாகத் தெரிவித்துள்ளது.