புதுடெல்லி: தங்களுக்கிடையிலான இருதரப்பு தற்காப்பு உறவை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இருநாட்டுத் தற்காப்பு அமைச்சர்களும் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த உடன்பாடு கையெழுத்தானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்தனர். அந்நகரில் நடந்த ஏபெக் மாநாட்டில் கலந்துகொண்டபோது இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்வது, அமெரிக்காவுடனான உறவைச் சரிசெய்வது, ரஷ்யாவுடனான உறவைத் தொடர்வது ஆகிய மூன்றிலும் இந்தியா சமமான அளவு கவனம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்தத் தற்காப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த சில வாரங்களாக மறுபடியும் தொடர்பில் இருந்து வருகின்றன.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 25 விழுக்காடு வரி விதித்ததையடுத்து வர்த்தக உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தை நின்றுபோனது. பிறகு இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து திரு டிரம்ப் மேலும் 25 விழுக்காடு வரி விதித்தார்.
இந்த 10 ஆண்டு தற்காப்பு உடன்பாடு, புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
“அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருடன் ஆக்ககரமான சந்திப்பு நடந்தது. முக்கிய 10 ஆண்டுகால அமெரிக்கா-இந்தியா தற்காப்புப் பங்காளித்துவக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டோம். ஏற்கெனவே வலுவாக இருந்துவரும் எங்களுக்கிடையிலான தற்காப்புப் பங்காளித்துவத்தில் இது புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும். இந்தத் தற்காப்புக் கட்டமைப்பு, அமெரிக்கா-இந்தியா தற்காப்பு உறவின் எல்லா அம்சங்களிலும் கொள்கை சார்ந்த வழிகாட்டியாக அமையும்,” என்று திரு ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்காப்பு உறவு இதற்கு முன்பு இவ்வளவு வலுவாக இருநததில்லை என்றார் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்.
“இது (தற்காப்புக் கட்டமைப்பு) தற்காப்பு ரீதியான எங்கள் பங்காளித்துவத்தை மேம்படுத்துகிறது. வட்டார நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்கும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. எங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்கிறோம்,” என்று திரு ஹெக்செத் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

