புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ரூ.33,500 கோடி செலவில் 31 அதி நவீன ஆளில்லா வானூர்திகளை (MQ-9B ‘hunter killer’ drones) வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் ஆளில்லா வானூர்திகளை வாங்க இந்தியாவின் தற்காப்பு அமைச்சு ஒப்புதல் அளித்தது. கடந்த வாரம் மத்திய அரசாங்கமும் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, ஆளில்லா வானூர்திகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) கையெழுத்தானது.
அமெரிக்காவின் அட்டாமிக்ஸ் நிறுவனம் அந்த ஆளில்லா வானூர்திகளைத் தயாரிக்கிறது.
மொத்தம் 31 ஆளில்லா வானூர்திகளில் கடற்படைக்கு 15 கடல் பாதுகாப்பு ஆளில்லா வானூர்திகளும், இந்திய விமானப்படை, தரைப்படைக்கு தலா 8 வான் பாதுகாப்பு ஆளில்லா வானூர்திகளும் வழங்கப்படும்.
இந்த ஆளில்லா வானூர்திகள் வானில் மிக உயரத்தில் 35 மணி நேரத்துக்கும் அதிகமாக பறக்கக் கூடியது. மேலும் 450 கிராம் வெடிகுண்டுகளை எடுத்துச் செல்லக் கூடியது.
அமெரிக்காவின் எம்க்யூ-9பி ப்ரீடேட்டர் ஆளில்லா வானூர்திகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் சிலவும் பயன்படுத்துகின்றன.
செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும் இவை ஆப்கானிஸ்தான் உள்பட சில நாடுகளில் மிகதுல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இவை ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகள் மற்றும்ஜிபியு-39பி குண்டுகளை வீசும் திறன் உடையது.
இது தொலைவிலிருந்து அல்லது தன்னியக்கமாக இயக்கப்படலாம். இந்த ஆளில்லா வானூர்திகள் சென்னை அருகே உள்ள ஐஎன்எஸ் ராஜலி, குஜராத்தில் போர்பந்தர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்சாவா,கோரக்பூர் ஆகிய இடங்களில் நிலைநிறுத்தப்படும்.