புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது.
இருதரப்பு உயரதிகாரிகள் இடையே புதுடெல்லியில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அந்த இறுதிக்கட்டத்துக்கு மிக அருகில் இருப்பதாகத் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் பெத்தானி பவுலோஸ் மோரிசன் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் இருதரப்புக்குமான முக்கிய இலக்குகள், பொருளியல் தாக்கம் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இடைக்கால ஏற்பாடு, விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகிய அம்சங்கள் முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம் 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியச் சந்தை, சில நிபந்தனைகளின் பேரில் அமெரிக்கப் பொருள்களுக்குத் திறந்துவிடப்படும்.
இதில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது புதுடெல்லி, வாஷிங்டன் இடையிலான பொருளியல் சார்ந்த உறவுகளை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என இருதரப்பும் நம்புகின்றன.
மேலும், ‘மிஷன் 500’ முன்முயற்சியின்கீழ் 2030ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை இரு நாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளன.
2025ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 149 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதுடன், இந்தியாவிற்கான அமெரிக்க ஏற்றுமதி 9.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்துப்் பேசிய பின்னர் இருதரப்புப் பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
அதேவேளையில், வேறு சில சவால்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 50 பில்லியன் டாலர் வர்த்தக சமநிலையின்மையும் இந்தியாவின் வரி விதிப்புகளும் அவற்றுள் முக்கியமானவை என்றும் அவை தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் கன்சாஸ் செனட்டர் ரோஜர் மார்ஷல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒரு நியாயமான, பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் வாஷிங்டன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

