புதுடெல்லி: அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விளக்கம் அளித்துள்ளார்.
போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் முன்வைக்கும் புகார்கள் அனைத்தும் உண்மையில்லாதவை என்று குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு நன்மைகளைக் கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதில் இந்தியத் தரப்பில் எந்தவித விட்டுக்கொடுத்தலும் செய்யப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, இந்தியாவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய விளைபொருள்களுக்கு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என அவர் உறுதிபடக் கூறினார்.
முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் 18 விழுக்காட்டு வரிக்குறைப்புடன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாகும்.
அதே வேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் இதனால் நமது நாட்டின் மண்ணும் பாரம்பரிய விதைகளும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் இறைச்சி, பால் பொருள்கள், சோயாபீன்ஸ், அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகளுக்கு எவ்வித வரிச் சலுகையும் வழங்கப்படவில்லை.
மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகள், பால் சார்ந்த பொருள்கள் மிளகு, மஞ்சள், சீரகம் உள்ளிட்ட நறுமணப் பொருள்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்பதையும் அமைச்சர் பட்டியலிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்திய அரசு அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விவசாயிகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி மிகுந்த உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் சௌஹான் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த விவசாய அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.
அமெரிக்காவிலிருந்து பருத்தி, பாதாம் போன்ற பொருள் தவிர, சோயாபீன் எண்ணெய், கால்நடைத் தீவனங்கள் மலிவாக இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என சம்யுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்திய ஜவுளிப் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்கும் சூழலில், அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா வரிச்சலுகை அளிப்பது நியாயமற்றது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பால் வளம், வேளாண் துறையில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என அரசு கூறினாலும் அமெரிக்க உணவுப் பொருள்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது இந்திய விவசாயத்தை அந்நிய நிறுவனங்களிடம் அடகு வைக்கும் செயல் என ஜக்ஜித் சிங் தல்லேவால் உள்ளிட்ட தலைவர்கள் சாடியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று கிராமங்கள் தோறும் உருவ பொம்மைகளை எரித்துப் போராட விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

