புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் எந்தவித உறுதியான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருதரப்புக்கும் இடையே ஓர் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுவது மீண்டும் தாமதமாகியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சநிலை மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினர்.
அதன் பிறகு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கீரிர் இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார். கடந்த புதன்கிழமை (ஜூன் 24) அப்பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
இதையடுத்து, பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதரப்பும் ஆய்வு செய்ததாக இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இருதரப்புப் பொருளியல் பங்காளித்துவத்தை மேலும் வலுவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய வர்த்தக அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இருதரப்பும் சமச்சீரான ஒப்பந்தத்தை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆகக்கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, சந்தை அணுகலை மேம்படுத்துவது, மின்னிலக்க வர்த்தகம், விநியோகச் சங்கிலியின் மீள்தன்மை ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்க, கடந்த பிப்ரவரியில் இருதரப்பும் இணக்கம் கண்டன. எனினும், அமெரிக்க நீதிமன்றம் அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பை ரத்து செய்துவிட்டது. இதனால், அந்த ஒப்பந்தம் எப்போது செயல்படுத்தப்படும் என்பதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
மேலும், கட்டாய உழைப்பு உள்ளிட்ட சில விவகாரம் தொடர்பாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையை வாஷிங்டன் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதும் இந்தியாவின் எதிர்பார்ப்பு.
இந்தப் பிரச்சினையை இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் எனப் புதுடெல்லி விரும்புவதாகத் தெரிகிறது.
ஆனால், சட்டரீதியில் இதற்கான உறுதியை வழங்க முடியாது என அமெரிக்கா கைவிரித்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இருதரப்புப் பேச்சுவார்த்தை முடங்கிவிட்டதாகப் புதுடெல்லியைச் சேர்ந்த ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்’ அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 87.3 பில்லியன் அமெரிக்க டாலராக (113 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) உயர்ந்தது. அதேவேளையில், இறக்குமதி 17.2 விழுக்காடு உயர்ந்து, 53.48 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

