புதுடெல்லி: பாகிஸ்தானின் நீர் ஆதாரங்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், இந்தியாமீது நேரடி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தண்ணீர் என்பது பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பின் மிக முக்கிய அங்கம் என்றும் அதற்கு ஆபத்து ஏற்படுவதாக உணரும் பட்சத்தில் அடுத்த நொடியே இந்தியாவுக்கு எதிரான போர் தொடங்கும் என்றும் அவர் ‘ஏஆர்ஒய்’ செய்தி முகவையிடம் குறிப்பிட்டார்.
இந்தியா தண்ணீரை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றும் அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்தது.
பாகிஸ்தான் தனது எல்லைக்குட்பட்ட பயங்கரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிக்கும் வரை நதிநீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்நிலையில், எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள், பாகிஸ்தானுடனான நதி நீர்ப் பங்கீடு முழுமையாக நிறுத்தப்படும் என்று இந்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் அனைத்துலக நாடுகள் தலையிடக் கோரி, ஐநா பாதுகாப்பு மன்றத்தை அணுகியுள்ளது.
சிந்து நதிநீர் இல்லையெனில், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து பகுதிகளில் விவசாயம் முற்றிலும் நிலைகுத்திப் போகும். குடிநீர்ப் பற்றாக்குறையும் ஏற்படும்.

