புதுடெல்லி: விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா மாறும் என்று இந்திய அதிபர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய முடிவுகள் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருவதை இந்தியா இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது என இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரை தொடங்கிவைத்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
‘அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்பதே இந்திய அரசின் மந்திரம் என்றார் அவர்.
“பெண்கள், இளையர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் ஆகியோருக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளைக் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு எனும் கனவை நனவாக்குவதில் அரசு உறுதிபூண்டுள்ளது.
“பழங்குடி சமூகத்தின் ஐந்து கோடி மக்களுக்காக மேம்பாட்டு திட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவதில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
“மேலும், இளைஞர்களின் கல்வி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
“70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதாரக் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அதிபர் முர்மு.
மூன்று கோடி லட்சாதிபதி பெண்களைக் கொண்டிருக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை ஓட்டுவது, காவல்துறையில் சேர்வது, நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது என இன்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள் என்றும் பாராட்டினார்.
இதேபோல் இந்திய இளைஞர்கள் ‘ஸ்டார்ட் அப்’கள் முதல் விளையாட்டு, விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டுக்குப் பெருமை தேடித் தருகிறார்கள் என்றும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது என்றும் அதிபர் முர்மு பெருமிதம் தெரிவித்தார்.
உலகின் கண்டுபிடிப்பு சக்தியாக இந்தியாவை மாற்றுவதே தமது அரசின் நோக்கம் என்றார் அவர்.
“இன்று மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான உலகளாவிய வீரராக இந்தியா தனது இருப்பை உணர வைக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளும் இந்தியாவின் யுபிஐ (UPI) பரிவர்த்தனை முறையின் வெற்றியால் ஈர்க்கப்பட்டுள்ளன.
“இந்திய அரசு சமூக நீதி, சமத்துவத்திற்கான ஒரு கருவியாக மின்னிலக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. சைபர் பாதுகாப்பு செயல்திறனை உறுதி செய்வதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மின்னிலக்க மோசடி, சைபர் குற்றம், ‘டீப்ஃபேக்’ ஆகியவை சமூக, நிதி, நாட்டின் பாதுகாப்புக்கு கடுமையான சவால்களாக உள்ளன,” என்றார் அதிபர் திரௌபதி முர்மு.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்படும் என்றும் விமான நிறுவனங்கள் 1,700 புதிய விமானங்கள் வந்து சேர்ந்த பின்னர் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது என்றும் அதிபர் குறிப்பிட்டார். இந்தியாவின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு இப்போது ஆயிரம் கிலோமீட்டர் என்ற மைல்கல்லைக் கடந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் சேவையை கொண்டுள்ளது என்றார்.
அனைத்து குடிமக்களுக்கும் சுகாதாரச் சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய கோயில்கள்’ நிறுவப்பட்டுள்ளன என்றார் அதிபர் முர்மு.
இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம், தொடர்ந்து 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.