தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷிலுள்ள 10,000 இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்: ஜெய்சங்கர்

2 mins read
9cde4926-683b-4b82-bccd-c10f66ea0ea4
பங்ளாதேஷ் அரசியல் குழப்பநிலையை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. - படம்: எக்ஸ் / எஸ். ஜெய்சங்கர்

புதுடெல்லி: பங்ளாதேஷிலுள்ள 10,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை அடுத்து, அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லி நாடாளுமன்ற இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

“பங்ளாதேஷ் நிலவரம் குறித்து அனைத்துக் கட்சிகளிடம் விளக்கப்பட்டது. நிலைமையைப் புரிந்துகொண்டு, அனைத்துக் கட்சிகளும் இந்திய அரசுக்கு ஒருமித்த ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளன,” என்று திரு ஜெய்சங்கர் தமது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பங்ளாதேஷில் விரைவில் அமைதி, சட்டம், ஒழுங்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்நாட்டு ராணுவத் தலைவர் வக்கர் உஸ் ஸமானிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பங்ளாதேஷிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா விருந்தாளியாக நடத்தப்படுவார் என்றும் அவரது எதிர்காலம் குறித்த முடிவை அவரே எடுப்பார் என்றும் அறியப்படுகிறது.

ஷேக் ஹசினாவை வெளியேற்றியதில் பாகிஸ்தானுக்கு எதுவும் பங்குள்ளதா என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது திரு ஜெய்சங்கரிடம் கேட்டதற்கு, பாகிஸ்தானின் தலையீடு குறித்து ஆராய்ந்து வருவதாகப் பதிலளித்தார்.

இதனிடையே, தேச நலன், பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் அரசுக்குக் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு வழங்கும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததாக பிடிஐ செய்தி கூறியது. ஆயினும், அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இவ்வேளையில், பங்ளாதேஷில் நடந்த மாணவர் போராட்டம், வன்முறைச் சம்பவங்கள், பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா, அவரது இந்திய வருகை, பங்ளாதேஷின் தற்போதைய நிலைமை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாநிலங்களவையில் அறிக்கை வாசித்தார்.

பங்ளாதேஷில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அங்குள்ள இந்தியத் தூதரகம், துணைத் தூதரகங்களுக்கு பங்ளாதேஷின் புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய திரு ஜெய்சங்கர், நிலைமை சீரடைந்ததும் அவை வழக்கமான முறையில் செயல்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்