புதுடெல்லி: இந்தியாவின் பகுதிமின்கடத்தி (semiconductor) உலகில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பகுதிமின்கடத்தி உற்பத்தியை மேம்படுத்தும் ‘செமிகான் இந்தியா 2025’ மாநாட்டை டெல்லியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கி வைத்து அவர் பேசினார்.
உலகளாவிய பகுதிமின்கடத்தித் துறையில் அதிகரித்துவரும் இந்தியாவின் ஆற்றலை எடுத்துரைத்த அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய சில்லுகள் உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் தாமதமாகத் தொடங்கினாலும், நம்மைத் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை என்றார்.
“கச்சா எண்ணெய் 20ஆம் நூற்றாண்டை வடிவமைத்ததுபோல, ‘மின்னிலக்க வைரம்’ என்று அழைக்கப்படும் பகுதி மின்கடத்தி, 21ஆம் நூற்றாண்டை வடிவமைக்கும். இது அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அது முழு உலகின் முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
உலகளாவிய பகுதிமின்கடத்தி சந்தை ஏற்கெனவே யுஎஸ் 600 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியே முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்கி அதிகளவில் திரும்புவதற்குக் காரணம் என்றார் பிரதமர் மோடி.
இந்த மூன்று நாள் மாநாட்டில் 48க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேலான பிரதிநிதிகள், 150க்கும் மேலான பேச்சாளர்கள், 50க்கும் அதிகமான உலகளாவிய தலைவர்கள், 350க்கும் மேலான கண்காட்சியாளர்கள் என 20,740க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். ஆறு நாடுகள் பங்கேற்கும் வட்டமேசை விவாதங்கள், செயல் திறன் மேம்பாடு, புதுத்தொழில்களுக்கான நாடுகளின் அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.