புதுடெல்லி: இந்தியா அணுவாயுத மிரட்டல்களுக்கு இனி அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அணுவாயுத அச்சுறுத்தல்களை இந்தியா சகித்துக்கொள்ளாது என்றும் ஒருபோதும் அதற்கு அடிபணியாது என்றும் அவர் திட்டவட்டமாகச் சொன்னார்.
இந்தியாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுதும் 79வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
இந்தியா தற்போது புதிய இயல்பு நிலையை வகுத்திருப்பதாக அவர் சொன்னார். பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்தைப் பேணி வளர்ப்போருக்கும் இடையே வேறுபாட்டைக் காணும் அணுகுமுறையைப் பின்பற்றப்போவதில்லை என்றார் திரு மோடி.
“ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நாட்டு மக்கள் மிகவும் சினமடைந்திருந்தனர்.
“எல்லை தாண்டி நாட்டிற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், அப்பாவிப் பொதுமக்களை அவர்களின் சமயத்தைக் கேட்ட பிறகு கொடூரமாய்க் கொன்றனர். அதற்குப் பதிலடியாக இந்திய ஆயுதப் படையினர் பாகிஸ்தானில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தினர்,” என்று அவர் சொன்னார்.
“இந்திய வீரர்களின் துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ மூலம் எதிரிகளின் கற்பனைக்கு எட்டாத பதிலடியை வீரர்கள் கொடுத்துள்ளனர்,” என்று திரு மோடி சொன்னார்.
இந்தியப் பிரதமர் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசினார். 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளது; தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் வெற்றிபெறுவதைக் காணமுடிகிறது; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பகுதி மின்கடத்திகள் ஆண்டிறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று திரு மோடி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எரிசக்தித் துறையில் இந்தியா தற்சாற்புக் கொள்கையைப் பின்பற்ற முடிவெடுத்திருக்கிறது. சூரிய சக்தி, ஹைட்ரஜன், அணுசக்தித் துறைகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
முக்கியக் கனிம வளங்கள் குறித்து ஒட்டுமொத்த உலகமும் அக்கறை கொண்டுள்ளது. அவற்றின் முக்கியத்துவத்தையும் அது புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் திரு மோடி சொன்னார்.
ஒவ்வொரு துறையிலும் இந்தியா தற்காப்புக் கொள்கையை முன்னெடுப்பதாகக் கூறிய அவர், போர் விமானங்களுக்கான இயந்திரங்களை இந்தியாவிலேயே தயாரிக்க இளையர்களுக்கும் அரசாங்கத் துறையினருக்கும் அழைப்பு விடுத்தார்.
நாட்டு மக்களுக்குப் பெரிய தீபாவளிப் பரிசு காத்திருப்பதாகவும் இந்தியப் பிரதமர் கூறினார்.
“ஜிஎஸ்டி குறைக்கப்படும். அதனால் சிறு வணிகங்கள் பயனடையும். பொருள் சேவை வரி குறைக்கப்படும்,” என்றார் அவர்.
ஏழைகள், விவசாயிகள், இளையர்கள், பெண்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும் இந்தியப் பிரதமர் உறுதியளித்தார்.

