புதுடெல்லி: அமெரிக்கா விதித்திருக்கும் வர்த்தக வரிகளுக்கு இந்தியா அடிபணியாது. அதற்கு பதிலாக புதிய சந்தைகளைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தும் என்று வாஷிங்டன் இந்தியப் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்த பிறகு, முதன் முதலாக பொது வெளியில் பேசிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரேனில் மாஸ்கோ மேற்கொண்டுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியா, ரஷ்யாவின் எண்ணெய்யை பெருமளவில் வாங்குவதற்கு தண்டனையாக, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியாவிலிருந்து பொருள்களுக்கு விதிக்கப்படும் 50 விழுக்காடு வரிகள் இந்த வாரம் அமலுக்கு வந்தன.
மீண்டும் அமெரிக்க அதிபர் ஆனதிலிருந்து, திரு டோனால்ட் டிரம்ப் வரிகளை ஒரு பரந்த அளவிலான கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தி வருகிறார். அதன் காரணமாக வரிகள் உலகளாவிய வர்த்தகத்தை புரட்டிப் போட்டுள்ளன.
ஆகஸ்ட் 29ஆம் தேதி, புதுடெல்லியில் நடந்த கட்டுமானத் துறை நிகழ்வில் பேசிய திரு கோயல், “யாராவது எங்களுடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பினால், இந்தியா அதற்கு எப்போதும் தயாராக உள்ளது,” என்றார்.
“அதேவேளையில், இந்தியா ஒருபோதும் மற்றவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாது, வலுவிழந்ததுபோல் காட்சியளிக்காது. நாங்கள் தொடர்ந்து ஒன்றுசேர்ந்து புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
திரு டிரம்பின் அண்மைய வரித் தாக்குதல், அமெரிக்க - இந்திய உறவுகளைப் பாதித்துள்ளது. முன்னதாக புதுடெல்லி இந்த வரிகளை, ‘நியாயமற்றது’, ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று விமர்சித்தது.
விவசாயம் மற்றும் பால்பொருள் சந்தைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்கின.
திரு டிரம்ப் இந்தியச் சந்தைக்குள் அதிக ஆதிக்கத்தை விரும்புகிறார். ஆனால், மிகப்பெரிய வாக்காளர் பிரிவாக விளங்கும் இந்தியாவின் விவசாயிகளைப் பாதுகாக்க இந்தியப் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதி நாடாக அமெரிக்கா இருந்தது. 87.3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$112 பில்லியன்) மதிப்புள்ள ஏற்றுமதிகள் நடந்தன.
50 விழுக்காட்டு வரி என்பது வர்த்தகத் தடைக்கு ஒப்பானது என்றும் சிறிய நிறுவனங்களுக்கு அது தீங்கு விளைவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு துறையையும் ஆதரிப்பதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் வரும் நாள்களில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று திரு கோயல் கூறினார்.
“இந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 2024-25 விகிதத்தை விட அதிகமாக இருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்,” என்று அவர் உறுதியளித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.