புதுடெல்லி: பயங்கரவாதிகள், இணைய வழி, பொருளியல் குற்றவாளிகள் என யாராக இருந்தாலும் அவர்களிடம் இரக்கம் கூடாது என அறிவித்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது, அவர்களை நாடு கடத்தி அழைத்து வருவதில் உள்ள பல்வேறு சவால்கள், உத்திபூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கும் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய அவர், உலகளாவிய செயல்பாடு, அரச தந்திரம், வலுவான ஒருங்கிணைப்பை இம்மாநாட்டில் உறுதி செய்யவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்திய எல்லைக்கு வெளியே இருந்து குற்றச் செயல்களில், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியா தனது எல்லைகளின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், சட்டத்தையும் வலுப்படுத்துவதில் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
“குற்றவாளிகளை நீக்கவும் நீதியின்முன் நிறுத்த வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக தண்டனை பெற வேண்டும். ஊழல், பயங்கரவாதம், இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்படும் ஒவ்வொருவருக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்கக் கூடாது,” என்றார் அமித்ஷா.