தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு இந்தியாமுன்னுரிமை: மோடி

2 mins read
d7ce6ecf-7e43-4710-9631-9c3f62ab3caa
ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் மோடி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சநிலை மாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது.

ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.

முன்னதாக இந்தியப் பிரதமர் மோடிக்கு ரஷ்யப் பிரதமர் புட்டின் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்குச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) ) புறப்பட்டுச் சென்றார்.

இந்தப் பயணத்தின் தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய அதிபர் புட்டின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக நான் ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறேன். 16வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய வளர்ச்சி, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளியல் ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாசாரம் மற்றும் மக்களை மக்களுடன் இணைப்பது போன்ற தொடர்பில் கலந்துரையாடலுக்கான முக்கிய தளமாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையால் நிகழ்ந்த பிரிக்ஸ் விரிவாக்கம் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நன்மைக்கான உரையாடல்களை, திட்டங்கள் வகுத்தலை ஊக்குவித்துள்ளது.

முன்னதாக பிரிக்ஸ் மாநாடு பற்றிப் பேசிய ரஷ்ய அதிபர் புட்டின், “பிரிக்ஸ் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்தியப் பிரதமர் மோடி கூறியதுபோல் இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் குறிப்பிடத்தக்க நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது,” என்று குறிப்பிட்டார்.

“சீனா மிகப்பெரிய பொருளியல் நாடாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. ரஷ்யாவும் சீனாவும் ஒரு தனித்துவ உறவைப் பேணுகிறது. எங்களது உறவு அனைத்துலக நிலைத்தன்மையை நிர்ணயிக்கிறது,” என்றும் திரு புட்டின் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்