வெனிஸ் கலைத் திருவிழாவில் ‘பார்வையாளர் சிங்கம்’ விருதை வென்ற இந்தியா

வெனிஸ் கலைத் திருவிழாவில் ‘பார்வையாளர் சிங்கம்’ விருதை வென்ற இந்தியா

படம்: தி இந்து

26 Nov 2026 - 3:03 pm

2 mins read

வெனிஸ்: வெனிஸ் கலைத் திருவிழாவில் சிறந்த தேசியப் பங்கேற்புக்கான ‘பார்வையாளர் சிங்கம்’ விருதை வென்று உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.

61வது அனைத்துலகக் கலைக் கண்காட்சி வெனிஸ் நகரில் நடைபெற்றது.

ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இக்கலைத் திருவிழாவில் பங்கேற்ற இந்தியா, பார்வையாளர்களின் வாக்களிப்பு மூலம் விருது பெற்றுள்ளது.

கண்காட்சி காலத்தில் ஏறக்குறைய 4.5 லட்சம் பார்வையாளர்கள் இந்திய அரங்கிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கலாசார அமைச்சு, நீதா முகேஷ் அம்பானி கலாசார மையம், செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் ஆகிய அனைத்தும் வழங்கிய இந்திய அரங்கம், ‘ஜியோகிராஃபீஸ் ஆஃப் டிஸ்டன்ஸ்: ரிமெம்பரிங் ஹோம்’ என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2026 மே 6ஆம் தேதியன்று அன்று இந்தியக் கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தொடங்கி வைத்தார்.

நினைவுகள், மரபு, அடையாளங்களை மையப்படுத்தி ஐந்து கலைஞர்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

தமிழகத்தின் கிராமப்புற மண்ணையும் களிமண்ணையும் கொண்டு அல்வார் பாலசுப்பிரமணியன் படைத்த ‘நமக்காக மட்டும் அல்ல’ (நாட் ஜஸ்ட் ஃபார் அஸ்), இயற்கை வடிவங்களால் ஈர்க்கப்பட்ட ரஞ்சனி ஷெட்டாரின் ‘அதே வானத்தின்கீழ்’ (அண்டர் த சேம் ஸ்கை), புதுடெல்லியில் இடிக்கப்பட்ட குடும்ப இல்லத்தை நூல் வேலைப்பாடுகளால் உருவாக்கிய சுமாக்ஷி சிங்கின் ‘பெர்மனன்ட் அட்ரஸ்’, லடாக்கின் பாரம்பரியக் கட்டடக்கலையைப் பேசிய ஸ்கர்மா சோனம் தாஷியின் ‘எக்கோஸ் ஆஃப் ஹோம்’, மூங்கிலைப் பயன்படுத்தி நகர்ப்புற மாற்றங்களைக் காட்டிய ஆசிம் வாகிஃபின் ‘சால்’ ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

வரும் டிசம்பர் 4, 2026 முதல் மார்ச் 21, 2027 வரை 108 நாள்களுக்குப் புதுடெல்லியில் ‘இந்தியா ஃபினாலே’ நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்த வெற்றியானது இந்தியக் கலை, கலாசார சமூகத்திற்குக் கிடைத்த பெருமைமிகு தருணம் என்று பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் வளமான பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று, உலகக் கலை அரங்கிற்குப் புதிய கோணங்களைக் கலைஞர்கள் வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்