தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய இந்திய விளம்பரச் சந்தை மதிப்பு: மின்னிலக்க விளம்பரங்களின் பங்களிப்பு 46%

2 mins read
af2c0293-5b55-41d4-83f3-4abe1969101a
இந்தியாவில் அனைத்து துறையிலும் மின்னிலக்கச் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. விளம்பரத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. திறன்பேசி மூலம் விளம்பரங்களைப் பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் விளம்பரச் சந்தையின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இது ஆறு முதல் ஏழு விழுக்காடு வரையிலான கூட்டு வளர்ச்சி விகிதத்தைக் குறிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மொத்த விளம்பர மதிப்பில் மின்னிலக்க விளம்பரங்களின் பங்களிப்பு ஏறக்குறைய 46% ஆகும்.

இந்தியாவில் அனைத்து துறையிலும் மின்னிலக்கச் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. விளம்பரத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்திய விளம்பரச் சந்தையின் மதிப்பானது, அண்மையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தற்போது கடந்துள்ளது.

மின்னிலக்க ஊடக ஆதிக்க சக்தியாகவும் இந்தியா உருவெடுத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2020 - 2021 நிதியாண்டில் 24%ஆக இருந்த மின்னிலக்க விளம்பரங்களின் சந்தை மதிப்பு தற்போது 46%ஆக அதிகரித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் இந்திய விளம்பரச் சந்தை 9 முதல் 11% வரை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஊடகங்களைக் காட்டிலும், மின்னிலக்க விளம்பர வருவாய் அதிகமாக உள்ளது.

கடந்த 2020-2021 நிதியாண்டில் கிட்டத்தட்ட 65% ஆக இருந்த தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பானது, என்பதில் இருந்து 2025 நிதியாண்டில் 46-47%ஆக குறைந்துவிட்டது.

இந்தியாவில் கடந்த 2019இல் 500 மில்லியனாக இருந்த திறன்பேசிப் பயனர்களின் எண்ணிக்கை, 2024இல் 700 மில்லியனாக அதிகரித்துள்ளது.

“மின்னிலக்கத் தளங்களில் விளம்பர உத்திகள், கூர்மையான இலக்குகளை நிர்ணயித்தல், அவற்றின் அளவிடக்கூடிய ஈடுபாடு ஆகியவை விளம்பரங்களில் முதலீடு செய்வோரைக் கவர்கின்றன.

இதனால் பாரம்பரிய நிறுவனங்களுமே மின்னிலக்கப் பங்கேற்பை விரும்புகின்றன. இது இந்தியாவின் விளம்பர சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மீளமுடியாத மாற்றத்தைக் குறிக்கிறது,” என்று கிரிசில் இன்டலிஜென்சின் இணை இயக்குநர் எலிசபெத் மாஸ்டர் கூறுகிறார்.

உலக அளவில் இந்தியாவில்தான் கைப்பேசித் தரவு (மொபைல் டேட்டா) மிக மலிவாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் அன்றாட சராசரி திரை நேரம் என்பது, ஐந்து மணி நேரத்துக்கும் மேல் என்ற அளவை எட்டியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, அன்றாட சராசரி நேரம் நான்கு மணிநேரமாக இருந்தது.

இதில், ஓடிடி, சமூக ஊடகங்களின் பயன்பாடு 60% ஆகும்.

குறிப்புச் சொற்கள்