இந்திய ‘ஏஐ’ முதலீடுகள் இரட்டிப்பாக அதிகரிக்கும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய ‘ஏஐ’ முதலீடுகள் இரட்டிப்பாக அதிகரிக்கும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

2 mins read
591e224b-afc8-44d8-a51f-43116a5964b7
அஸ்வினி வைஷ்ணவ். - படம்: தி ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப‌ மாநாடு உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் ஆகப்பெரிய ‘ஏஐ’ மாநாடாக இந்த மாநாடு உருப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு ஏஐ துறைக்குத் தேவைப்படும் திறமைசாலிகளை கண்டறியும் என்றார் அவர். இம்மாநாட்டில் நூறு நாடுகள் பங்கேற்கும் என்றும் 15 நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

“ஏஐ துறையில் ஏற்கெனவே 70 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளைப் பெற்றுள்ளோம். இந்த முதலீடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையின் உள்கட்டமைப்பில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

“ஏஐ உள்கட்டமைப்பு, தொழில் துறைக்காக இறுதி செய்யப்பட்ட பாடத் திட்டங்களை 500 பல்கலைக்கழகங்களுக்கு‌ விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ஏஐ திறன் மேம்பாடு மேலும் அதிகரிக்கும்,” என்றார் அஸ்வினி வைஷ்ணவ்.

ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பின் முறையான முன்னேற்றம், அதன் பயன்பாடு தொடர்பான தீர்வுகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும் பிரதமர் மோடியின் அண்மைய நடவடிக்கைகள் இதைப் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

ஏஐ துறை சார்ந்த முதலீடுகள் இந்திய ஏஐ மாநாடு முடிவடைந்தவுடன் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஏஐ கட்டமைப்பு ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா பெற்றுள்ள பலம், பழைய மென்பொருள் மேம்பாட்டிற்குப் பதிலாக, செயற்கைத் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாற்றம் ஊக்கமளிக்கிறது,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாக ஏஎன்ஐ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே 200 ஏஐ மாதிரிகளை உருவாக்கியுள்ளன என்றும் அவை பெரும்பாலும் உலக அளவிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருகுறிப்பிட்ட துறையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் இந்தியா உருவாக்கியுள்ள ஏஐ மாதிரிகள், முழுமையாக கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்