புதுடில்லி: இந்தியாவின் விமான நிறுவனங்கள், கோடைக்காலத்திற்கான சேவைகளைக் கிட்டத்தட்ட 10 விழுக்காடு வரை குறைப்பதாக அறிவித்துள்ளன.
கோடைக்காலத்தில் வழக்கமாகக் கொடிகட்டிப் பறக்கும் இந்தியாவின் விமானச் சேவைகள் ஈரானில் நிலவும் போரால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட ஒன்பது விமான நிறுவனங்கள் கடந்த ஆண்டின் கோடைக்காலத்தின்போது வாரத்திற்கு 25,600க்கும் அதிகமான விமானச் சேவைகளை வழங்கின.
இந்த முறை கிட்டத்தட்ட 2,560 சேவைகளைக் குறைத்து வாரத்திற்கு 23,049 சேவைகளை மட்டும் வழங்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதிவரை இந்தியாவின் விமான நிறுவனங்கள் கோடைக்காலச் சேவைகளை வழங்குவது வழக்கம்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் பதற்றமான சூழலால் கோடைக்கால சேவைகளை இந்தியாவின் மத்திய அரசு குறைக்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாகவே இந்தியாவின் மத்திய அரசு கோடைக்கால விமானச் சேவைகளுக்கான அட்டவணையைத் தயாரித்தது.
தற்போது போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான நான்கு விமானச் சேவைகளில் மூன்று சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் அனைத்துலகப் பயணிகள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்குச் சென்றுவருவதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் கவலையுற்றுள்ளன.
ஆகாயவெளியில் நிலவும் கட்டுப்பாடுகளால் இந்தியாவிலிருந்து புறப்படும் விமானங்கள் மாற்றுவழி காரணமாகத் தொலைதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே எரிபொருள் விலை அதிகரிப்பைச் சமாளித்துவரும் விமான நிறுவனங்கள், மாற்றுப் பாதையில் செல்வதால் நீண்ட நேரம் பயணம் செய்யவேண்டிய நிலையையும் எதிர்கொள்கின்றன.
பயணச்சீட்டுகளுக்கான விலையை விமான நிறுவனங்கள் அதிகரிக்கலாம். ஆனால் அதன்மூலம் செயல்பாட்டின் செலவில் ஒரு சிறிய அளவை மட்டும்தான் சரிகட்ட முடியும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

