புதுடெல்லி: இந்தியப் பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் கேட்டிருந்த விமானப் பயணச்சீட்டுக் கட்டணம் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்ள இந்திய விமான நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
இதனால், சந்தையில் பயனீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதன் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்திற்கு மார்ச் 11ஆம் தேதி அனுப்பிய கடிதத்தைத் தான் கண்டதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், விமானப் பயணச்சீட்டுக் கட்டணம் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்வது வணிக அடிப்படையில் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிறுவனக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை, கட்டணக் கண்காணிப்பை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன.
குறிப்பாக, இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களே இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 90 விழுக்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதனால், கட்டணங்களை முடிவுசெய்வதிலும் அவ்விரு நிறுவனங்களின் கைகளே ஓங்கியிருக்கின்றன. இது அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 3ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது, கடந்த 2022-2024 காலகட்டத்தில் வசூலித்த கட்டணம் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி இந்திய விமான நிறுவனங்களிடம் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் கேட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், கட்டணம் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்வதால் ஆலோசனை நிறுவனங்களும் வெளிநிறுவனங்களும் அவற்றைப் பெற ஏதுவாகிவிடும் என்பதால் அது தங்களுக்கு வணிகம் சார்ந்து பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாறாக, எதிர்காலத்தில் விற்கப்படும் பயணச்சீட்டுகளில் குறிப்பிட்ட விழுக்காடு குறித்த தரவுகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் அதனையும் வாடிக்கையாக அல்லாமல், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் அவை தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
கடந்த காலங்களில் விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களை இந்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்தியது. கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின்போது நடப்பிலிருந்த இருமாத பொது முடக்கத்திற்குப்பின், 2020 மே மாதம் மீண்டும் விமானச் சேவைகள் தொடங்கியபோது குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டண வரம்புகள் விதிக்கப்பட்டன. ஆயினும், 2022 ஆகஸ்ட்டில் அந்த வரம்புகள் அகற்றப்பட்டன.