புதுடெல்லி: இந்திய வான்பரப்பு பாதுகாப்பானது. பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பயணிகள் பயமின்றி விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் ஜூலிப்கர் ஹாசன் உறுதியளித்துள்ளார்.
இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளதையடுத்து ஆணையம் விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளது.
“ஆலோசனைக் கூட்டத்தில் விமானங்களின் பாதுகாப்பு குறித்தும் பயணிகள், விமான நிறுவனங்களுக்கு சிரமத்தைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்று உள்துறை அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஒரே வாரத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அனைத்தும் புரளி என விசாரணையில் தெரியவந்தது.
சனிக்கிழமை மட்டும் 30க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல்களால் சோதனைக்குப் பிறகு பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. சில விமானங்கள் சோதனைக்காகத் திசை திருப்பிவிடப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட ரூ.60 முதல் ரூ.80 கோடி வரை இந்திய விமானங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
குண்டு மிரட்டல் புரளிகளால் விமானத்தைத் தரையிறக்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலையம் கட்டணம், பயணிகளுக்கான இழப்பீடு என சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, குண்டு மிரட்டல் விடுப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களைக் கடுமையாக்குவது குறித்து இந்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்றும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இயக்குநர் விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சின் செயலாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.