ஜூலையில் இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும்

ஜூலையில் இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும்

2 mins read
bcec0b4b-4006-4001-ad25-283288e3cfa0
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பெரும்பாலான உலக நாடுகளுக்கு விதித்த இறக்குமதி வரி காரணமாக இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மந்தமடைந்தது. - கோப்புப் படம்: ஃபார்ச்சூன்

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியாகக்கூடும் என இந்தியத் தொழில், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற சந்திப்புகளுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை வேகம் பெற்றுள்ளதாகப் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், முன்னேற்றம் இருந்தபோதிலும், சில சவால்கள் நீடிப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்தமானது சந்தை அணுகலை மேம்படுத்தி, குறிப்பிட்ட சில துறைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குத் தங்கள் போட்டியாளர்களைவிடச் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள சில பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருதரப்பும் தீர்வுகளை அடையாளம் காண இணைந்து பணியாற்றிவரும் வேளையில், இந்திய வர்த்தக அமைச்சர், ஜூலை மாத மத்தியில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கோடிகாட்டியுள்ளார்.

ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வதை நோக்கி இருதரப்புப் பேச்சுவார்த்தை வேகமாக நகர்ந்து வருவதாகக் கடந்த 5ஆம் தேதி அவர் கூறியிருந்தார்.

புதுடெல்லியில் இரு நாடுகளின் அதிகாரிகளும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அவர் திங்கட்கிழமை தெரிவித்த கருத்துகள் அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

“அமெரிக்காவிலிருந்து வர்த்தகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒரு முழுமையான குழு புதுடெல்லியில் உள்ளது.

“முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து இரு தரப்பினரும் பேசி வருகின்றனர்,” என்றார் பியூஷ் கோயல்.

அதிபர் டோனல்ட் டிரம்ப் பெரும்பாலான உலக நாடுகளுக்கு விதித்த இறக்குமதி வரி காரணமாக இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மந்தமடைந்தது.

மேலும், கட்டாய உழைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளும் பேச்சுவார்த்தைகளைப் பாதித்தன. தற்போது இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்நரேந்திர மோடிவர்த்தகம்ஒப்பந்தம்இறக்குமதிவரி