தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக இந்திய, சீன மாணவர்கள் வழக்கு

2 mins read
0e046470-578f-4202-8d20-82dca021741a
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், மாணவர்கள் விசா ரத்து விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.  - படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து அனைத்துலக மாணவர்கள் பலர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து, அதிபர் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.

மூன்று இந்திய, இரண்டு சீன மாணவர்களும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

நூற்றுக்கணக்கான அனைத்துலக மாணவர்களின் எஃப்-1 (F-1) எனப்படும் மாணவர்களுக்கான தகுதி ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாணவர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்கக்கூடிய தகுதியை தாங்கள் இழந்துவிட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்படும் மாணவர்கள் குடியேற்றத் தடுப்புக்காவல், நாடுகடத்தலை உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், கடுமையான நிதி, கல்வி சார்ந்த நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாணவர்கள் பட்டப்படிப்பை உரிய காலத்தில் முடித்த பின்னர் பட்டம் பெறுவதும், விருப்ப நடைமுறை பயிற்சி எனப்படும் ‘ஓடிபி’ திட்டத்தில் பங்கேற்று எங்கும் பணிபுரிவதும் சிக்கலாகிவிட்டதாக மாணவர்களின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் விசா, சட்டப்பூர்வமாகத் தங்கும் தகுதியை ரத்து செய்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

இவ்வாறு ரத்து செய்யப்பட்ட அமெரிக்க விசா வழக்குகளில் 50% இந்திய மாணவர்களுடன் தொடர்புடையது என அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த மாணவர்களின் சட்டப்பூர்வ தகுதியானது, செல்லாது என முடிவு செய்வதற்கு முன்பு, அவர்களுக்கான சலுகைகளை நிறுத்துவதற்கு முன்பு வெளியிட வேண்டிய முறையான அறிவிப்பை அரசாங்கம் வழங்கவில்லை என்பதே பாதிக்கப்படும் மாணவர்கள் தரப்பின் வாதமாக உள்ளது.

“தற்போது வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்கள் தங்கள் படிப்பை முடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அனுமதிக்கப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத எந்த பணியிலும் ஈடுபடவில்லை. ஓராண்டுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய வன்முறை குற்றத்திற்காக எந்தத் தண்டனையும் பெறவில்லை,” என்றும் மாணவர்களின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்த விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. எனவே அவரது பயணத்தின்போது இந்தியத் தரப்பில் இதுகுறித்துப் பேசப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு, திங்கட்கிழமை (ஏப்ரல் 21) மாலை இடம்பெற உள்ளது. அப்போது அதிபர் டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பேசப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்