இந்திய, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் மூன்றாவது முறை ஆலோசனை

இந்திய, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் மூன்றாவது முறை ஆலோசனை

2 mins read
909b4ee9-3bd7-4f13-b94b-6920c9f7f3a7
ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அபாஸ் அராக்சியுடன் திரு ஜெய்சங்கர் விரிவான உரையாடலை நடத்தியதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. - கோப்புப்படம்: ரெடிஃப்

புதுடெல்லி: மேற்காசிய நிலவரம் குறித்து ஈரான், ஜெர்மனி மற்றும் தென்கொரியா நாடுகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அபாஸ் அராக்சியுடன் திரு ஜெய்சங்கர் விரிவான உரையாடலை நடத்தியதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதற்குப் பிறகு மூன்றாவது முறையாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஹோர்முஸ் நீரிணையை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க இயலாது என ஈரான் சூளுரைத்துள்ளது. இதையடுத்து தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.

“ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மாலை உரையாடினேன். தற்போது நடந்துவரும் மோதல் தொடர்பான அண்மைய நிலவரம் குறித்த விரிவான உரையாடலாக அது அமைந்தது. இருதரப்பும் தொடர்ந்து தொடர்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று திரு ஜெய்சங்கர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் ஆகியோருடனும் டாக்டர் ஜெய்சங்சர் தொலைபேசி மூலம் மேற்காசியாவின் நிலைமை குறித்து விவாதித்தார்.

திரு சோ ஹியூனுடன் நல்ல உரையாடல் அமைந்ததாகவும் மேற்காசியாவின் நிலைமை, அதன் ஆற்றல் தாக்கங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

“உலகப் பாதுகாப்பு, பொருளியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேற்காசியாவின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்திய, தென்கொரிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து நெருக்கமான தகவல் தொடர்பைப் பேண ஒப்புக்கொண்டோம்,” என திரு சோ ஹியூன் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையிலான உயர்மட்ட பரிமாற்றங்கள் இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு உயர்த்தும் என்றும் உத்திபூர்வ பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று டாக்டர் ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டார் என்றும் திரு சோ ஹியூன் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்