புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு வரும்போது இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) மும்பையில் இருவரும் சந்திக்கின்றனர்.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“திரு ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
ஜெய்சங்கர், ரூபியோ இடையிலான இச்சந்திப்பு, உலகளாவிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான வழிகளை இரு தரப்பும் விவாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வார இறுதியில் ரூபியோ, மும்பை, ஜாம்நகருக்கு வருகையளிக்கிறார். இது, இந்த ஆண்டில் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.
ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் மீதான தடைகளிலிருந்து விலக்குப் பெற இந்தியா காத்திருக்கும் வேளையில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நெருக்கமான தொடர்புகளால் இந்திய-அமெரிக்கா உறவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க, இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லாவின் அதிகாரபூர்வ வருகையை முன்னிட்டு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் மும்பையில் ஜெய்சங்கர் அவருக்கு விருந்தளித்து உபசரிப்பார் என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
