பாலக்காடு: ரயில் பயணத்தின்போது கைப்பேசியைத் தொலைத்த இந்திய ராணுவ ஊழியர் ஒருவர்க்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது மீண்டும் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் மங்கலம்குன்னு பகுதியைச் சேர்ந்த பி. விபின், ராணுவத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2023 ஜூன் மாதம் விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது, ராஜதானி விரைவுரயிலில் தமது கைப்பேசியைத் தொலைத்துவிட்டார். சோரனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகே கைப்பேசி காணாமல்போனதை அவர் உணர்ந்தார்.
உடனடியாக அதுபற்றி ரயில்வே பாதுகாப்புக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய அரசின் ‘சஞ்சார் சாத்தி’ இணையவாயிலில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எனினும், தொடக்கத்தில் கைப்பேசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அண்மையில் மீண்டும் விடுமுறையில் வீட்டிற்குச் சென்ற விபின், ஓட்டப்பாலம் காவல் நிலையத்தை அணுகி ‘சஞ்சார் சாத்தி’ இணையவாயிலில் வழக்கை மீண்டும் பதிவுசெய்தார்.
அதன்பின் சில நாள்களிலேயே பத்தனம்திட்டா பகுதியில் புதிய சிம் அட்டைமூலம் அந்தக் கைப்பேசி இயக்கப்பட்டதாகத் தானியக்கக் கண்காணிப்பு முறை எச்சரிக்கை விடுத்தது.
காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில், வடஇந்திய வணிகர் ஒருவரிடமிருந்து அந்தப் பழைய கைப்பேசியைப் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் வாங்கியது தெரியவந்தது. அவர் கேரளத்திற்கு வந்து புதிய சிம் அட்டையைப் பொருத்தியதும் ‘சஞ்சார் சாத்தி’ விழிப்பூட்டியது. உடனே காவல்துறை விரைந்து சென்று அவரிடமிருந்து கைப்பேசியைப் பறிமுதல் செய்து, விபினிடம் ஒப்படைத்தது.
இத்தகைய சிக்கலான வழக்கை ஓட்டப்பாலம் காவல்துறை தீர்த்துவைத்தது இது முதன்முறையன்று. முன்னதாக, கீழூரில் தொலைந்துபோன கைப்பேசி ஒன்றை சவூதி அரேபியாவிலிருந்து அது மீட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


