புதுடெல்லி: இந்திய ராணுவம், 800 கிலோமீட்டர் வரை பாயக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்திய ராணுவம் முன்வைத்த கோரிக்கைக்குக் கூடிய விரைவில் அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தற்காப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு, ரஷ்யாவின் என்பிஓ (NPO) மஷினொஸ்டிரோயினெய்யா ஏறிகணை வடிவமைப்பு அலுவலகம் ஆகியவை ஒன்றிணைந்து பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கின்றன.
இந்தியாவின் பிரம்மபுத்ரா ஆறு, ரஷ்யாவின் மோஸ்க்வா ஆறு ஆகியவற்றை இணைத்து ஏவுகணைக்குப் பிரமோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நிலம், ஆகாயத் தள ஏவுகணைக் கட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளைப் பாய்ச்ச முடியும்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பேரளவில் உதவியாக இருந்ததாய் இந்திய ராணுவம் குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய முன்னேற்றமாக 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம்வரை பாயக்கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிடுகிறது.
வேகமாகப் பாய்ந்து வெகுதூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய திறனைப் பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் கொண்டுள்ளன.
இந்தியாவிடம் ஏற்கெனவே 450 கிலோமீட்டர்வரை பாயக்கூடிய ஏவுகணைகள் இருந்தாலும் பாதுகாப்பை வலுப்படுத்த பிரமோஸ் ஏவுகணைகளை ராணுவம் வாங்குகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை முன்னிட்டு உலகளாவிய பாதுகாப்புச் சவால்களைக் கருத்திற்கொண்டும் எதிர்காலத் தேவைகளை முன்னிட்டும் இந்தியா அந்த முடிவை எடுத்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனீசியா உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டது.
அனைத்துலக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது ஆகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டுவரை அனைத்துலக ஆயுத இறக்குமதியில் இந்தியா 8.3 விழுக்காட்டைக் கொண்டுள்ளது என்று ஸ்டோக்ஹோல்ம் அனைத்துலக அமைதி ஆராய்ச்சிக் கழகம் குறிப்பிட்டது.

