புதுடெல்லி: இந்திய முப்படைகள் ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
போர் நடவடிக்கை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மீண்டும் அத்தகையதோர் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் எனக் கருதினால், தரைப்படை மட்டுமல்லாமல் விமானப்படை, கடற்படையும் தயாராக உள்ளன. ஆப்பரேஷன் சிந்தூர் 2.0க்கும், அடுத்தகட்ட போருக்கும் இந்திய முப்படைகள் தயாராகி வருகின்றன,” என்று தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
தற்போது முப்படைகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதிலும் அடுத்தகட்ட போருக்கு 24 மணி நேரமும் தயார்படுத்திக் கொள்வதிலும் இந்திய முப்படைகள் கவனம் செலுத்திவருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது போர்க்களமானது மிகவும் வெளிப்படையாகத் தெரிவதால், ஒவ்வோர் அசைவும் எதிர்த்தரப்பினருக்குத் தெரிந்துவிடும் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, இந்தியப் படையினரையும் எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான படைகளை நிலைநிறுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அவர், ஒரு தேசம் முழுவதும் ஒன்றுசேர்ந்து களமிறங்கும்போது போரில் வெற்றி உறுதி என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் ஆளில்லா வானூர்திகள் (டிரோன்), மோப்ப நாய்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பயங்கரவாதிகளை ஒழிக்க மேற்கொள்ளப்படும் ‘ஆப்பரேஷன் ஷெருவாலி’ நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் மன்ஜாகோட் பகுதியின் அடர்ந்த வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகள் குழுவை ஒழிக்கும் முயற்சிகளைப் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், சிஆர்பிஎப் ஆகிய முத்தரப்பும் தொடங்கிய கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆப்பரேஷன் ஷெருவாலி எனக் குறிப்பிடப்படுகிறது.

