18,600 அடி உயரத்தில் சிக்கித் தவித்த ஆடவரை மீட்ட இந்திய ராணுவம்

18,600 அடி உயரத்தில் சிக்கித் தவித்த ஆடவரை மீட்ட இந்திய ராணுவம்

2 mins read
4f7210c9-3640-4b24-83d2-befe04c0ff7d
நன்-குன் மலைத்தொடரில் சிக்கித் தவித்தவரைத் துல்லியமாகத் திட்டமிட்டு மீட்டது இந்திய ராணுவ ஹெலிகாப்டர். - படங்கள்: @firefurycorps_IA/எக்ஸ் தளம்
Google News Preferred Icon

லடாக்: லடாக்கின் ஆபத்தான நன்-குன் மலைத்தொடரில், ஏறக்குறைய 18,600 அடி உயரத்தில் சிக்கித் தவித்த ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ளனர்.

பனிப்புயல் நிலவிய சூழலில், அடர் பனி படர்ந்த செங்குத்தான மலைமுகட்டில், ஹெலிகாப்டரைத் திறம்பட இயக்கி இந்தத் திகைப்பூட்டும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மிகக் கடுமையான காற்று வீசியதாலும் ஹெலிகாப்டரை முழுமையாகத் தரையிறக்க போதிய இடமில்லாததாலும் விமானி ஹெலிகாப்டரின் ஒரே ஒரு சறுக்குக் கட்டையை மட்டும் பனியின்மீது தொட்டவாறு அந்தரத்தில் நிலைநிறுத்தி, கயிற்றைப் பயன்படுத்தி அந்நபரைக் காப்பாற்றியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிக அதிக உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்பதால், ஆபத்தைத் தவிர்க்கும் நோக்கில் ஹெலிகாப்டரின் எடையைக் குறைக்கும் பொருட்டு அதிலிருந்த தேவையற்ற கருவிகள் நீக்கப்பட்டு, மிகக் குறைந்த அளவிலான எரிபொருளுடன் இந்த ஆபத்தான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய நாளின் சூரிய வெளிச்சம் முழுமையாக மறைவதற்கு முந்தைய, கடைசி சில நிமிடங்களில் இந்த மீட்புப் பணி மிகத் துல்லியமாக, திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் ‘ஃபையர் அண்ட் ஃபியூரி கார்ப்ஸ்’ பிரிவு அதன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ள இந்த அசாத்தியமான மீட்புப் பணியைக் காட்டும் காணொளி, இணையத்தில் அதிகம் பரவிவருகிறது.

நாட்டின் எல்லையைக் காப்பதோடு மட்டுமல்லாமல், இக்கட்டான சூழலில் மக்களின் உயிரைக் காக்க இந்திய ராணுவத்தினர் மேற்கொள்ளும் வீர தீர சாகசத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்