9,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகப் பயிற்சி

9,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகப் பயிற்சி

1 mins read
05576c10-e08f-41a6-941e-97630c8c3a7f
வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் ஷி யோமி பகுதியில் அமைந்துள்ள பசாங் சோனம் ஏரிப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகப் பயிற்சியை மேற்கொண்டனர். - படம்: எக்ஸ்/ஸ்பியர் கார்ப்ஸ்
multi-img1 of 4

இட்டாநகர்: அனைத்துலக யோகா நாளை (ஜூன் 21) முன்னிட்டு, கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 9,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 31) யோகப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் ஷி யோமி பகுதியில் அமைந்துள்ள பசாங் சோனம் ஏரிப்பகுதியில் அவர்கள் அப்பயிற்சியை மேற்கொண்டனர்.

முன்னணி எல்லைப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் இந்தச் சிறப்பு அமர்வில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தூய்மையான மலைச்சூழலில் ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி மற்றும் தியான முறைகளை மேற்கொண்டனர் என்று தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது

கடினமான நிலப்பரப்புகளிலும் தொலைவிலுள்ள எல்லைப் பகுதிகளிலும் பணியாற்றும் வீரர்களின் உடல்தகுதி, மனவுறுதி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகப் பயிற்சியின் பங்கினை இந்நிகழ்வு கோடிட்டுக் காட்டியது.

மேலும், இது வீரர்களின் நெகிழ்வுத்தன்மை, கவனிப்புத்திறன், மனஅழுத்த நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு நிறுவனம் எடுத்த முடிவின்படி ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அனைத்துலக யோகா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

எல்லைப் பகுதிகளில் உள்ள வீரர்கள் தங்களின் மனவலிமையையும் செயல்பாட்டுத் தயார்நிலையையும் பேண முற்படுவதை இந்த யோகப் பயிற்சி அமர்வு காட்டுவதாக அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்