தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளி விவசாயி: ஆராய்ச்சி மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரர் சுக்லா

2 mins read
6d61e59c-d90f-4e91-b505-41098373d4bd
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: தனது விண்வெளிப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, விவசாயியைப் போல் செயல்பட்டு வருகிறார்.

அவர் விண்வெளியில், வெந்தயம், பச்சைப் பயிறு நாற்று ஆகியவற்றை வளர்த்து வருவது தெரியவந்துள்ளது.

அண்மையில், ‘ஆக்ஸியம் மிஷன் 4’ என்ற திட்டத்தின்கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.

அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் சுபான்ஷு சுக்லா. குறிப்பாக, ஒரு விவசாயியாக மாறி, சிறு குடுவைகளில் பச்சைப்பயறு, வெந்தய விதைகளை வளர்த்து வரும் அவர், அவற்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளார்.

நுண் ஈர்ப்பு விசையானது விதை முளைப்பு, தாவர வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சுக்லா ஆய்வு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அவர் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி லூசி லோவுடன் மேற்கொண்ட உரையாடல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

“இஸ்ரோ, இந்தியா முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்காக நான் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளேன். இது சாத்தியமானது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது உற்சாகததையும் மகிழ்ச்சியையும் தருகிறது,” என்று சுபான்ஷு சுக்லா கூறினார்.

இந்த ஆராய்ச்சி தொடர்பாக தார்வாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாடு இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகிய இரு விஞ்ஞானிகளும் தற்போது அவரை வழிநடத்தி வருகின்றனர்.

சுக்லா பூமிக்குத் திரும்பியதும், அவர் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய விதைகள் பல தலைமுறைகளாக பயிரிடப்படும். இதன் மூலம், அவற்றின் மரபியல், நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகள், ஊட்டச்சத்து பண்புகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விண்வெளியில் நடைபெறும் மற்றொரு பரிசோதனையில், நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி, பின் அதைச் சேமித்து வைத்துள்ளார் சுக்லா. அவை உணவு, உயிர்வாயு, உயிரி எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திறனுக்காக ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்