அகமதாபாத்: அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூவாண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது, 2021ஆம் ஆண்டு 4,330ஆக இருந்த அந்த எண்ணிக்கை 855% கூடி, 2023ஆம் ஆண்டில் 41,330 ஆகிவிட்டது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகளைச் சுட்டி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியேனும் அமெரிக்காவில் குடியேறிவிட வேண்டும் என்ற அவர்களின் தீராத ஆவலை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 5,430 இந்தியர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டது என்று இவ்வாண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட, அடைக்கலம் பெற்றவர்கள் குறித்த ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2021ஆம் ஆண்டு 4,330 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் அளிக்கக் கோரி, அந்நாட்டின் குடியுரிமை, குடிநுழைவுச் சேவைகள் பிரிவிற்கு விண்ணப்பம் அளித்தனர். அவர்களில் 1,330 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதற்கு மறுஆண்டில் 14,570 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், 4,260 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடைக்கலம் அளிக்கப்பட்டது.


