இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு

2 mins read
ecaab188-ab2e-4d74-8957-a67da68c01a7
பிரதமர் மோடி. - படம்: தி ஹாக்

புதுடெல்லி: சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவை அனைத்துலக அளவில் முக்கியமான விமானச் சரக்கு மையமாக உருவெடுக்கச் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் ஆகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்து மாநாடு ‘விங்ஸ் இந்தியா 2026’ என்ற பெயரில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் காணொளி வசதி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் வேகமாக வளர்ந்துவரும் சிவில் விமானச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார்.

விமான உற்பத்தி, போக்குவரத்து, குத்தகை, விமானிப் பயிற்சி ஆகியவற்றில் முதலீட்டாளர்களுக்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டில் 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன என்றும் அந்த எண்ணிக்கை தற்போது 160ஐ கடந்துவிட்டது என்றும் திரு மோடி சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 400ஐக் கடந்துவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் விமானச் சேவை அறவே இல்லாத பல்வேறு வழித்தடங்களில் கடந்த சில ஆண்டுகளாக விமானங்கள் இயக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கையின் மூலம் 1.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள்‌ விமானப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

அதிகரிக்கும் தேவை: போயிங் அறிக்கை

விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் அதுதொடர்பான பயணத்திலும் முதலீட்டாளர்கள் நீண்டகால பங்குதாரராகவும் இணை விமானி போலவும் செயல்பட வேண்டும் என்றார்.

இதனிடையே, இந்தியா, தெற்காசியாவிலும் விமானப் பயணச் சேவைக்கான சேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ‘தெற்காசிய சந்தைக்கான வணிகக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் 2044க்குள் இந்த வட்டாரங்களில் விமானங்களின் தேவை நான்கு மடங்கு அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்திய, தெற்காசிய வட்டாரங்களில் 795 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2044க்குள் 3,300ஆக அதிகரிக்கும் என்றும் குறுகிய-அகல விமானங்களின் பங்கு 90 விழுக்காடாக இருக்கும் என்றும் போயிங் தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சி காரணமாக 45,000 விமானிகள் தேவைப்படுவர். மேலும், 45,000 தொழில்நுட்பப் பணியாளர்கள், 51,000 விமானப் பணியாளர்கள் தேவைப்படுவர் என போயிங் நிறுவனம் கணித்துள்ளது.

இக்காலகட்டத்தில் சரக்கு விமானங்களின் எண்ணிக்கையும் ஐந்து மடங்காக அதிகரிக்கும் என்பதுடன், தெற்காசியாவில் மட்டும் விமானத் துறையில் ரூ. 17.55 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்