ரியாத்: இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை சவூதி அரேபியாவின் ரியாத் மத்திய சிறையில் கழித்த பிறகு 2026 டிசம்பரில் விடுவிக்கப்படவுள்ளார்.
சவூதி குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரஹீம், 2006 டிசம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடக்கத்தில் ரியாத் நீதிமன்றம் ரஹீமுக்கு மரண தண்டனை விதித்தது. ஆயினும், மாண்ட குழந்தையின் குடும்பத்தார் இழப்பீட்டுத் தொகைக்கு ஒத்துக்கொண்டதை அடுத்து, அவரது மரண தண்டனை குறைக்கப்பட்டது.
இழப்பீட்டுத் தொகையாக 15 மில்லியன் சவூதி ரியால் (S$5.13 மில்லியன், ரூ.35 கோடி) வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
குடும்ப ஓட்டுநர் விசாவில் கடந்த 2006 நவம்பரில் தமது 26வது வயதில் ரியாத் சென்றார் ரஹீம். பின்னர் அவர் தம் உரிமையாளரின் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பணியில் அமர்த்தப்பட்டார். கழுத்துக்குக் கீழே செயல்படாத நிலையில் இருந்த அச்சிறுவனுக்குச் சிறப்புக் கருவிமூலம் உணவும் நீரும் வழங்கப்பட்டன.
2006 டிசம்பர் 24ஆம் தேதி அச்சிறுவனை ஏற்றிக்கொண்டு வேனை ஓட்டிச் சென்றார் ரஹீம். தற்செயலாக அவர் அச்சிறுவனின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கருவியில் இடித்துவிட, அது அவனது கழுத்திலிருந்து கழன்றது. இதனால், அச்சிறுவன் சுயநினைவை இழந்தான். சோதித்துப் பார்த்தபோது அவன் இறந்துவிட்டதை ரஹீம் உணர்ந்தார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சமரச முயற்சிகளை அடுத்து, அச்சிறுவனின் குடும்பத்தினர் இழப்பீடு பெற்றுக்கொள்ள இணங்கினர்.
ரஹீம் மீதான வழக்கு 12 முறை ஒத்திவைக்கப்பட்டது.

